வேட்புமனு தாக்கல்செய்த கணத்தில் என் மனம் தாங்க முடியாத பாரத்தில் நசுங்கியது, கண்கள் கசிந்தன. என்மீது எங்கள் தலைவர் எழுச்சித் தமிழர் திருமாவளவன் அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை எண்ணி ஒருபுறம் பெருமிதமும் இன்னொருபுறம் அச்சமும் உண்டானது. சிதம்பரம் தொகுதியில் அவர் வெற்றி பெறுவது உறுதி. திருவள்ளூரில் நான் வென்றால்தான் கட்சிக்கு தேர்தல் ஆணைய அங்கீகாரம். அதை சாதிக்கவேண்டிய மிகப்பெரிய பொறுப்பு என் தோளில் விழுந்துள்ளது.
நான் எவ்வளவோ மறுத்தும் நான் வேட்பாளராக நிறுத்தப்பட்டேன். நான் மறுத்துக் கூறிய காரணங்களைவிட எங்கள் தலைவர் என்னை நிறுத்துவதற்கு சொன்ன காரணங்கள் வலுவாக இருந்தன. எனவே இதை நான் ஏற்றுக்கொண்டேன்.
திமுக வினர் என்னை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு களப்பணியாற்றிவருகின்றனர். விடுதலைச் சிறுத்தைகளின் களப்பணி நம்பிக்கையளிக்கிறது. இந்தத் தொகுதியிலிருக்கும் தலித் மக்கள், கட்சி சார்பைத் தாண்டி எனக்கு வாக்களிக்க முடிவுசெய்துவிட்டனர் என்பது கிராமங்களில் நான் பிரச்சாரம் செய்தபோது தெரிந்தது. வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக ஊடகங்கள் சொல்கின்றன.இவையெல்லாமே எனது மனப் பிரமையாகக்கூட இருக்கக்கூடும். அடுத்த 18 நாட்களில் நாங்கள் செய்யப்போகும் களப்பணியே தேர்தல் முடிவைத் தீர்மானிக்கும்.
இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றால் அது மிகப்பெரிய வரலாற்றுப் பதிவாக இருக்கும். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வாக்கு எல்லா வாக்குக்கும் ஒரே மதிப்பு என ஏற்படுத்தினார் அம்பேத்கர். ஆனால் எல்லா வெற்றிக்கும் ஒரே மதிப்பு இல்லை. திருவள்ளூரில் நான் பெறப்போகும் வெற்றிக்குப் பின்னால் 'தலித் இயக்கம் ஒன்றுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைக்கவேண்டும் ' என ஏங்கும் சுமார் இரண்டுகோடி இதயங்கள் துடித்துக்கொண்டிருக்கின்றன!
No comments:
Post a Comment